இயேசு (Jesus, கி.மு. சுமார் 4 – கி.பி. சுமார் 30-33) என்பவர் கிறித்தவ சமயத்தின் மைய நபர் ஆவார். கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர்) என்றும் நம்புகின்றனர்.
இயேசு, கலிலேய நாட்டில் வாழ்ந்த ஒரு யூதர் ஆவார்.இவர் திருமுழுக்கு யோவான் என்பவரிடம் திருமுழுக்கு பெற்றார். அதைத்தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கும் ஊழியத்தைத் தொடங்கினார். அவர் தன் செய்தியை வாய்வழியாக அறிவித்து வந்தார். ஆகவே அவர் பெரும்பாலும் ரபி (போதகர்) என்று அழைக்கப்பட்டார்.கடவுளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று இயேசு தன் சக யூதர்களுடன் விவாதித்தார். மேலும் நோயாளிகளைக் குணப்படுத்தினார்; உவமைகள் மூலம் போதித்தார்.
இதனால் பல மக்கள் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினர். பிறகு யூத அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இயேசு, உரோம அரசின் முன் நிறுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து உரோம ஆளுநர் பொந்தியு பிலாத்து என்பவரின் கட்டளைப்படி இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.இயேசு இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக நம்பிய அவரது சீடர்கள் இணைந்து தோற்றுவித்த சமுதாயம் பிறகு தொடக்கக்கால கிறித்தவமாக வளர்ந்தது.
இயேசுவின் பிறப்பு வருடந்தோறும் டிசம்பர் 25ம் நாளன்று கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக போற்றப்படுகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இயேசு தூய ஆவியின் மூலம் கருத்தரித்தார், கன்னி மரியாளின் மூலம் பிறந்தார், அற்புதங்களை நிகழ்த்தினார், பாவங்களைப் போக்க சிலுவையில் தன்னை பலியாகக் கொடுத்தார், சாவினின்று உயிர்த்தெழுந்தார், விண்ணேற்றம் அடைந்தார் மற்றும் பூமிக்கு மீண்டும் வருவார் ஆகிய நம்பிக்கைகள் கிறிஸ்தவ கோட்பாட்டில் அடங்கும்.
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். இசுலாம் சமயத்தில் இயேசு முக்கியமான இறைத்தூதர்களில் ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார். இசுலாமிய மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் கன்னி மரியாளிடம் பிறந்தார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை.[20] மெசியா குறித்த இறைவாக்குகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதால் இயேசு மெசியா இல்லை என்று யூத மதத்தினர் வாதிடுகின்றனர்.
No comments:
Post a Comment