உலக நாடுகள் சங்கம்

உலக நாடுகள் சங்கம் (League of Nations, LON) என்ற பன்னாட்டு கழகம் பாரிசு அமைதி மாநாட்டின்படி முதல் உலகப் போர் முடிந்த பின்னர் எதிர்காலத்தில் இத்தகைய போர்கள் நடைபெறா வண்ணம் காக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. 

   ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னோடியான இதுவே தனது முதற் குறிக்கோளாக அமைதிப் பேணலைக் கொண்ட முதல் நிரந்தர பன்னாட்டு உலகப் பாதுகாப்பு அமைப்பாகும்.

 உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உருவாக்க ஒரு சட்டப்பிரிவும் வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்தது. பன்னாட்டுக்கழகம் நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன். பாரிஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது பன்னாட்டுகழகம் அமைப்பதற்காக பெருமுயற்சி எடுத்தார்.

  1920 ஆம் ஆண்டு பன்னாட்டுகழகம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஜெனீவாவில் இருந்தது. தனது உச்சநிலையில், 28 செப்டம்பர் 1934 முதல் 23 பெப்ரவரி 1935 வரை, 58 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதனுடைய வரைமொழியின்படி, கூட்டுப் பாதுகாப்பு மூலமாக போர்த்தடுப்பு, ஆயுதங்கள் குறைப்பு, பன்னாட்டு முறையீடுகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணுதல் மற்றும் பன்னாட்டு மத்தியஸ்தம் ஆகியவற்றை முதன்மையான நோக்கங்களாகக் கொண்டிருந்தது. 

மேலும் தொழிலாளர் நலன், பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு, மனித அடிமைகள் போக்குவரத்து, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், உலக நலன் மற்றும் சுகாதாரம், போர்க்கைதிகள் போன்ற பல பிரச்சினைகளும் இவ்வமைப்பால் கவனிக்கப்பட்டது.

அரசியல் அமைப்பு -  பன்னாட்டு அமைப்பு
பொதுச் செயலாளர்
1920–1933 சேர் எரிக் டிரம்மண்ட்
1933–1940 யோசஃப் லூயி அவெனோல்
1940–1946 சியான் லெசுடர்


பன்னாட்டு கழகத்தின் உறுப்புகள்
  • செயலகம்
  • நிர்வாகசபை
  • பன்னாட்டு தொழிலாளர் சங்கம்
  • பன்னாட்டு நீதிமன்றம்
  • பொதுஅவை
  • பன்னாட்டு கழகத்தின் சாதனைகள்
  • ஆலந்து தீவுகள்
  • மொசூல் எல்லைச்சிக்கல்
  • யூபென் மற்றும் மால்மடி


நூறாண்டுகளுக்கும் மேலாக நாடுகள் கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து ஓர் திருப்புமுனையாக பன்னாட்டளவில் பாதுகாப்பு தேடும் ஓர் அமைப்பாக உலகநாடுகள் சங்கம் அமைந்தது. இதற்கென தனி படைத்துறை இல்லாததனால், தனது தீர்மானங்களை செயல்படுத்தவும், பொருளியல் தடைகளை நிலைநிறுத்தவும் அல்லது தேவையான நேரங்களில் படை ஒன்றை அனுப்பவும் பேராற்றல் நாடுகளை நாடவேண்டி வந்தது. ஆனால் அந்நாடுகள் மிகுந்த தயக்கம் காட்டின.

பொருளியல் தடைகள் உறுப்பினர் நாடுகளிலும் தாக்கமேற்படுத்தியதால் அவற்றை செயல்படுத்தவும் தயங்கின. இரண்டாம் இத்தாலி அபிசீனியப் போரின்போது, இத்தாலிய படைவீரர்கள் செஞ்சிலுவை மருத்துவ கூடாரங்களைத் தாக்குவதாக சங்கம் குற்றஞ்சாட்டியபோது பெனிட்டோ முசோலினி " குருவிகள் சண்டைக்கே சங்கம் சிறந்தது, பருந்துகள் சண்டைக்கல்ல" என்று மொழிந்தார்.

பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் 1920களில் சந்தித்த உலகநாடுகள் சங்கம் 1930களில் அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக செயலற்றுப் போனது. மே 1933இல் செருமனி அரசால் தமது சிறுபான்மை உரிமைகள் மீறப்படுவதாக, பிரான்சு பெர்ன்ஹெய்ம் என்ற யூதர் மேல் சிலேசியாவில் முறையீடு செய்தார். இதன் விளைவால் இப்பகுதியில், 1937ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவிற்கு வரும்வரை, பல ஆண்டுகள் செருமானியர்களின் யூத எதிர்ப்பு சட்டங்கள் தள்ளிப்போடப்பட்டன. 1937க்குப் பிறகு சங்கத்தின் அதிகாரத்தை நீடிக்க மறுத்து யூத இனவழிப்பு செயல்களில் ஈடுபட்டனர்.

இட்லர் இந்தக் கட்டுப்பாடுகள் செருமனியின் அரசாண்மையில் குறுக்கிடுவதாக குற்றஞ்சாட்டினார். எனவே சங்கத்திலிருந்து செருமனி விலகியது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட பிறநாடுகளும் விலகின. இரண்டாம் உலகப் போர் துவக்கம் உலகநாடுகள் சங்கம் தனது குறிக்கோளான உலகப் போரை தடுக்கின்ற வல்லமையில் தோல்வியடைந்ததை குறிப்பிடுவதாக அமைந்தது. இந்த உலகப் போரின் பின்னால், கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனம் சங்கத்தினால் துவக்கப்பட்ட பல்வேறு முகமைகளையும் நிறுவனங்களையும் வரித்துக் கொண்டது.

1 comment: